கரூர் ஜூலை, 31
கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் இருந்து மணல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு 15 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று, நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது வேனின் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்து, பின்னர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் கொம்பாடிபட்டியை சேர்ந்த நந்தகுமார் 21 அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உடனடியாக வேனை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். வேனின் இருந்த தொழிலாளர்கள் வேகமாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வேனில் எரிந்துகொண்டிருந்த தீயை தண்ணீரை அடித்து அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
#Vanakambharatham #Karur #news