நாகப்பட்டினம் செப், 5
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆரோக்கிய மாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இதனால் இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கோவா, மும்பை, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 8 ம்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துள்ளனர். இன்னும் பல பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். சிறிய தேர்பவனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7 ம்தேதி நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்று வருகிறது.மேலும், விழாவையொட்டி மாதாவின் சொரூபம் தாங்கிய சிறிய தேர்பவனி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று இரவு 8 மணிக்கு மாதாவின் சிறிய தேர்பவனி நடைபெற்றது.