வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும், கால அவகாசம்நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். ஆனால், நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசுஉறுதிபட கூறியுள்ளது. ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கட்டாயமாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த 2021 – 2022 நிதியாண்டுக்கான கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.இதற்குப் பிறகும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால், அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.கடந்த 25ம் தேதி வரை, மூன்று கோடி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 29ம் தேதி நிலவரப்படி, 4.52 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு முந்தைய நிதியாண்டான 2020 – 2021ல் வருமான வரி படிவங்கள் தாக்கல் எண்ணிக்கை, 2021 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 5.89 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய நிதியாண்டு கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதிகள் நீட்டிக்கப்பட்டதை போல, இம்முறையும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், அபராதம் இன்றி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி தான் கடைசி நாள் என்றும், மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது. இதன் பிறகு கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள ஒரு தனிநபர், நாளையிலிருந்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனில், 1,000 ரூபாய் அபராத கட்டணம் செலுத்த நேரிடும்.
இதுவே, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்கள், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.இதுவும், வரும் டிசம்பர் வரை மட்டுமே. அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து மார்ச் வரை கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
அதிகாரிகள் உதவ தயார்
வருமான வரித் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2021 – 2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யவும். அபராதமின்றி செலுத்த இன்றே கடைசி நாளாகும்.
‘ஆன்லைன்’ வாயிலாக கணக்கு தாக்கல் செய்வோருக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்படும். ஏதாவது புகார்கள், பிரச்னை இருப்பின், பான் எண் மற்றும் மொபைல் எண் விபரங்களை orm@cpc.incometax.gov.in என்ற ‘இ – மெயில்’ முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதிகாரிகள் தொடர்பு கொண்டு தீர்வு அளிப்பர்.http://incometax.gov.in என்ற இணையதளத்தில், மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
#Vanakambharatham #ITfilelastday #news