கோயம்புத்தூர் செப், 2
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடுப்பு சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதில் தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ், முருகன் என்பவரின் மகன் ஹரி , பிரபு, நித்திஷ், நிர்மல் ஆகிய 5 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் நடராஜ், சிறுவன் ஹரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். மற்ற 3 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வட்டாட்சியர் பானுமதி, துணை ஆய்வாளர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் கோவில் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.