கீழக்கரை அக், 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதில் உதவி மின்வாரிய பொறியாளர் பழனிக்குமார் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
MMK.காசீம் 8வது வார்டு: மழை காலத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு மாற்று வழி காண வேண்டும்.
மீரான் அலி 7வது வார்டு: மழை நேரங்களில் டிரான்ஸ்ஃபார்மர்களின் கீழ்பகுதியில் நீர் கட்டும் போது எர்த் அடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மூர் நவாஸ் 19வது வார்டு: மின் பயனாளர்களின் வீடுகள்,கடைகளில் முறையாக ரீடிங் எடுப்பதில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டினை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட 60 நாட்களில் மின் கணக்கீட்டு அளவினை எடுக்கவேண்டும்.60 முதல் 70 நாட்களில் கூட தாமதப்படுத்தி ரீடிங் எடுப்பதால் கூடுதல் கட்டணம் உருவாகி பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் சறுக்கல் ஏற்படுவதோடு தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
சக்கினாபேகம் 18வது வார்டு: ஊரின் பல இடங்களிலும் பயன்படாத பழைய மின் கம்பங்கள் சாலைகளில் கிடக்கின்றன.இதனால் அந்த பகுதிகளில் குப்பைகளும் தேங்குகின்றன.உடனடியாக பழைய மின் கம்பங்களை அகற்றிட வேண்டும்.
பைரோஸ்பாத்திமா 6வது வார்டு: எனது வார்டில் உள்ள பழுதான மின் கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.
வணக்கம் பாரதம் செய்தியாளர்: மாதம் மாதம் ரீடிங் எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறாவிட்டாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கும் ரீடிங் முறையையாவது சரியாக பின்பற்ற வேண்டாமா? சில வீடுகளில் 70 நாட்கள் கழித்தும் கூட ரீடிங் எடுப்பதாக புகார்கள் வருகின்றன, அத்தைகைய முறையற்ற ரீடிங் அளவினால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன தீர்வை வைத்துள்ளீர்கள்? என கேட்கப்பட்டது.
உதவி மின்பொறியாளர் பழனிக்குமார்; குறைந்தபட்சம் 60 முதல் 65 நாட்களுக்குள்ளாக ரீடிங் எடுக்கப்பட்டு விடும்.ஒருவேளை பத்திரிக்கையாளர் சொல்வதைப்போன்று கூடுதல் நாள் கழித்து ரீடிங் எடுக்கப்பட்டு அதுகுறித்த புகார் எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்