Spread the love

கீழக்கரை ஜூலை, 30

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் துணை தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று(30.07.2024) காலை நடைபெற்றது.

கீழக்கரை நகர் முழுவதும் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியினை சுமீத் கிரீன் தனியார் நிறுவனத்துக்கு 2024 ஆகஸ்ட் முதல் 2025 மே மாதம் வரை ஒப்பந்தப்பணி நீட்டிப்பு உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டு குறித்த தேவைகளை பேசினர்.

சூர்யகலா: புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள பழைய மீன் கடையை மட்டும் இடிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அங்கே இருக்கும் கடைகளையும் சேர்த்து இடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்.

தலைவர்: விரைவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து கடைகளையும் இடிக்கப்படும்.

உம்மு சல்மா: 12வது வார்டில் கழிவு நீர் வாறுகாலில் மூடிகள் இல்லாமல் குப்பைகள் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் ஓடுகிறது.இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

துணை தலைவர்: வாறுகால் மூடி தற்போது ஸ்டாக் இல்லாததால் போட முடியவில்லை.விரைவில் உரிய ஏற்பாடு செய்து வாறுகால் மூடி போடப்படும்.

தலைவர்: நகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் பல்வேறு அத்தியாவசிய பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.வரி வசூல் செய்து நிலைமையை சீராக்குவோம்.

சுஐபு: கடைகளுக்கான வரியை முறையாக வசூல் செய்தாலே ஓரளவுக்கு நிதி ஆதாரத்தை அதிகரிக்கலாம்? வரி வசூலர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

மூர் நவாஸ்: சமீபத்தில் வள்ளல் சீதக்காதி சாலையில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கமுதி பால் கடை எதிர் சாலையில் இருந்து கிழக்குத்தெரு வரைக்கும் உள்ள ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள்? நமதூரின் பழம்பெறும் கடைத்தெருவுக்குள் ஆட்டோவில் போய் வந்த நிலை மாறி தற்போது அங்கே இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாதவாறு ஆக்கிரமிப்புகள் உள்ளன.இதையெல்லாம் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்: விரைவில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலை துவங்கும்.

சேக் உசேன்: நகராட்சியில் நிதி நிலைமை மோசமாக உள்ளதென சொல்கிறீர்கள்.தேவையற்ற செலவினங்களை தவிர்க்கலாமே? 11 ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பும் கொடுத்துள்ளோம்.இதில் நான்கு மட்டுமே வேலை செய்கிறது.மீதமுள்ள 7 வேலை செய்யவில்லை.இன்னும் அந்த ஏழு கிணற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் ஏன்? தீர்மானம் 8ல் எங்கள் வார்டுகளின் தேவைகள் இடம் பெறவில்லை.அதனால் இந்த தீர்மானத்தை ரத்து செய்து விட்டு அடுத்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினரின் வார்டுக்கும் இடமளிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

நசுருதீன்,சுஐபு: கீழக்கரையில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சுகாதார ஆய்வாளர்: நாய்களை பிடித்தால் FIR போடுகிறார்கள்.நாங்கள் என்ன செய்ய முடியும்?

சேக் உசேன்: நாய்களை கட்டுப்படுத்தும் விசயத்தில் நகராட்சி நிர்வாகம் படுதோல்வி அடைந்துள்ளது.கடந்த காலங்களில் நாய்களை பிடித்து கருத்தடை செய்த பின்னரும் அவைகள் அதிகமான இனப்பெருக்கம் செய்தது எப்படி?

சித்திக்: நமக்கு நாமே திட்டத்தில் எவ்வளவு நிதி கையிருப்பு உள்ளது?

தலைவர்: 28 லட்சம் உள்ளது.இதில் மூன்றில் ஒருமடங்கு தொகையை பொதுமக்கள் வழங்கினால் 28 லட்சம் ரூபாயை நமதூர் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

பாதுஷா: கீழக்கரை DSP அலுவலக சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தில்லையேந்தல் ஊராட்சி இதை கண்டு கொள்ளவேயில்லை.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழக்கரை மக்கள் தான்.அதனால் அந்த 100 மீட்டர் சாலையை மட்டுமாவது கீழக்கரை நகராட்சியில் இணைப்பதற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கூறி தலைவரிடம் மனு அளித்தார்.

இவ்வாறு நகர்மன்ற உறுப்பினர்களின் விவாதம் நடந்து கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தில் 8 மற்றும் 18வது வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *