கீழக்கரை ஜூன், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி கேட்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து நமது செய்தியாளர் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, குப்பை அகற்றும் டெண்டர் தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் பொறுப்பில் உள்ள வாகனங்கள் பழுதடைந்து விட்டதால் மாற்று வாகன ஏற்பாடு செய்யாததால் இந்த அவலநிலை நீடிப்பதாக கூறுகின்றனர்.
தனியார் நிறுவனத்தை கேட்டால் நகராட்சி மீது பழி போடுவதும் நகராட்சியை கேட்டால் தனியார் நிறுவனத்தின் மீது பழி போடுவதுமாய் ஊர் நாற ஆரம்பித்து விட்டது.
சுகாதார விசயத்தில் மெத்தனமாய் நடந்து கொள்ளும் நகராட்சி மற்றும் கிரீன் சுமீத் தனியார் நிறுவனத்தை கண்டித்து சமூக வலை தளங்களில் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சுகாதார சீர்கேட்டினால் டெங்கு,காலரா போன்ற கொடிய நோய்கள் பரவுவதற்கு முன்பாக அதிரடியாக களமிறங்கி குப்பைகளை அகற்றுவதற்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.
ஜஹாங்கீர் அரூஸி./மாவட்ட நிருபர்.