Spread the love

துபாய் மே, 7

ஐக்கிய அரபு அமீரகத் துபாயில் உள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழக உள்ளரங்கில் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் அங்கீகரிக்கப்பட்டத் தொடர்பு மையமாக, கற்றல் கல்வி மேலாண்மை மையம் நடத்திய கலைப் பண்பாட்டுத் திருவிழா நடைபெறுகிறது.

இதில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு அரசின் கலைப்பண்பாட்டுத் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் காந்தி, அமீரகத்தில் இருந்து தொழிலதிபர் காதீர் ஜாதன், இலங்கை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், பிட்ஸ் பிலானி துபாய் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் சீனிவாசன் மடப்பூசி தலைமையில் கற்றல் கல்வி துவக்கம் இயல், இசை, நாடகம் என கலைப் பண்பாட்டுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக கற்றல் ஆலோசகர் ரேவதி ராஜசேகரன், அன்வர் குழுமத்தின் இயக்குனர் அன்வர்தீன், பேராசிரியர் சித்திரை பொன் செல்வன், மனநல ஆலோசகர் டாக்டர் ஃபஜீலா ஆசாத், இனிய நந்தவனம் மாத இதழ் இயக்குநர் நந்தவனம் சந்திரசேகரன், தொழிலதிபர் அப்துல் வஜீத் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம், கலை சார்ந்த பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசு கோப்பையும், இரண்டாம் பரிசு பதக்கமும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் திருக்குறள் முற்றோதல் செய்த பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பதக்கமும், அதிர்ஷ்ட குலுக்கல் தங்கத் தோடும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கற்றல் கல்வி மேலாண்மை மையத்தில் பயணிக்கும் ஆசிரியர்கள், குழந்தைகள், அலுவலர்கள் அனைவரும் தங்களுடைய படைப்பை ஒரு நூலாக “கற்றல் எழுத்துச் சிற்பிகள்” என்ற நூலை தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி வெளியிட்டு முதல் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் இரண்டாம் பிரதியை இனிய நந்தவனம் சந்திரசேகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் பெற்றனர்.

மேலும் இவ்விழாவிற்கு அதிப் குழுமத்தின் தலைவர் அன்சாரி , சிராஜ் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் பிரதீப் குமார், தமிழ் ஆர்வலர் தரெஜினால்ட் சாம்சன், ஸ்பிரெட் ஸ்மைல் நிறுவனர் மக்கள் ஆர்ஜே. சாரா, ஹோப் குழுமத்தின் இயக்குனர் கவுசர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துக் கொண்டு குழந்தைகளுக்கு சிறந்த மாணாக்கியர்,நூறு சதவீதம் வருகைப்பதிவு, நூறு சதவீதம் மதிப்பெண், பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கற்றல் கல்வி மேலாண்மை மையத்தில் அனைத்து வகுப்பில் தமிழ் பயிலும் மாணக்கியர்களுக்கு தலைமை விருந்தினர்கள் பட்டமளிப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கி சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பில்

கற்றல் பெட்டிக் கடையாக நம் பண்டைய உணவுகளான கம்பர் கட்டு, தேன் மிட்டாய், இலந்த வடை, ராகி உருண்டை, கேழ்வரகு மிட்டாய்,மண் சட்டி சோறு, முறச்சாலத்தில் ஆரஞ்சு மிட்டாய், கோலி சோடா என பல பதார்த்தங்களையும், பல்லாங்குழி, நொண்டி, ஐந்தாங்கல், சிலம்பம், தாயம், பரமபதம் என பல விளையாட்டுகள் பற்றிய வரலாற்றையும் , ஆட்டங்கல், அம்மிக்கல் உரல்,மர சொப்பு சாமான்கள் வைக்கப்பட்டும் குழந்தைகளுக்கு நெல் எழுத்து பயிற்சி, சிலேட்டு, பல்ப்பம் , ஆட்டிசம் விழிப்புணர்வு என எண்ணற்ற செயல்பாடுகளை கற்றல் விழாக்குழு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

விழாவில் கலந்துக் கொண்ட தலைமை விருந்தினர் தமிழ்நாடு அரசின் தமிழ்க் கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குனர் எஸ்.ஆர் காந்தி தனது தலைமையுரையில், கல்வி ஒன்றே நம் அடையாளமாகவும் நம் வாழ்வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாகும். அப்படிப்பட்ட நம் தமிழ்க்கல்வியை

அமீரகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்றுக் கொள்ளும் மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகள். கடல் கடந்து சொந்தங்களையும் மாணவச் செல்வங்களையும் அவர்களின் திறமைகளையும் கண்டு பெருமையாக உள்ளது என்றும், 2014ல் ஒரு குழந்தையுடன் ஆரம்பித்து 2024ல் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீர்மையாக கொண்டு செல்லும் முனைவர் ஸ்ரீ ரோகிணி மற்றும் கற்றல் குழுமத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்‌ என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நிறைவாக கற்றல் கல்வி மேலாண்மை மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஸ்ரீரோகிணி மற்றும் தியாகு நினைவுப் பரிசு கொடுத்துக் கெளரவித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.//அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *