கீழக்கரை மே, 7
மதுக்கடை உள்ள ஊர்களில் கூட குடித்த பாட்டில்களை மறைத்து போடும் போது மதுக்கடை இல்லாத கீழக்கரையில் முக்கிய வீதிகளிலெல்லாம் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாய் கிடக்கின்றன.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போல மதுபாட்டில்களும் ஊர் முழுவதும் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படும் இந்த நாசகார போதை பொருட்களை கட்டுப்படுத்தக்கோரி பல்வேறு சமூக ஆர்வலர்களும், அதிகார இயந்திரங்களிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் காது கேளாதோரிடம் ஊதிய சங்கை போன்று தான் உள்ளன.
தற்போதைய +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதில் மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெறாதவர்களாகவும், சிலர் தேர்வு எழுதாதவர்களாகவும், பலரும் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே பெற்றவர்களாகவும் காணமுடிகிறது.
இதற்கு பல்வேறு காரணங்களை கூறினாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சிலர் அடிமையாகி படிப்பில் கவனம் செலுத்தாததும் முக்கிய காரணி என சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கவலை கொள்கின்றனர்.
இறைநேசர்கள் அதிகமாய் வாழ்ந்த மண்ணில் தான் இத்தனை அவலங்களும் நடந்தேறி வருகின்றன.
யாரைத்தான் நம்புவதோ…..பேதை நெஞ்சம்….அம்மம்மா பூமியிலே…யாவரும் வஞ்சம்….என்ற பாடல் வரிகளே மனதில் வந்து போகின்றன.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்