கீழக்கரை மே, 5
தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகி போனது மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து என்னும் அறிவிப்பு.
தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விடப்படும் பல்வேறு வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து வாக்குறுதியும் இடம் பெற்று விடுகின்றன.அரசியல் கட்சிகளின் ஏமாற்று வாக்குறுதியை நம்பி கல்வி கடனை திரும்ப செலுத்த முடியாமல் பலரது குடும்பங்களும் திண்டாடுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித கல்வி கடனும் ரத்து செய்யப்படாததால் கடன் வாங்கி படித்த மாணவர்களில் பலரும் இன்று போதிய வேலை வாய்ப்பும் கிடைக்காமல் கடனையும் அடைக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
சிலர் வாங்கிய கடனில் பாதி அளவுக்கு திருப்பி செலுத்தியும் கூட வட்டிக்கு மேல் வட்டி, வட்டிக்கு குட்டி என பல லட்சங்களை திருப்பி செலுத்த வேண்டுமென வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.
கீழக்கரையில் ஒருவர் தனது கல்விக்காக நான்கு லட்சம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று அதில் இரண்டு லட்சம் திருப்பி செலுத்தியுள்ள நிலையில் இன்னும் 7 லட்சம் வங்கிக்கு தரவேண்டுமென வங்கியில் இருந்து தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
தற்போது ரிலையன்ஸ் என்னும் தனியார் நிறுவனம் மூலம் கடனை வசூல் செய்யும் வேலையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செய்து வருகிறது. நாங்கள் சொல்லும் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் அப்படி செய்து விடுவோம் இப்படி செய்து விடுவோம் என்றெல்லாம் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
வங்கி கொடுத்த கடனை மொத்தமும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்த அரசியல் கட்சிகளே.வாங்கிய கடனை மட்டும் கட்டி விடுகிறோம் என சொல்லும் மாணவர் செல்வங்களின் பெருந்தன்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் கல்விக்கடனுக்கான வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக கல்விக்கடன் ரத்து செய்வோம் என்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்து திரும்ப திரும்ப மாணவர் செல்வங்களை ஏமாற்றாதீர்கள்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்