ராமநாதபுரம் ஆகஸ்ட், 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன். மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது.
இந்த நிலையில் நேற்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். வீட்டில் இருந்து கடற்கரையை நோக்கி நடந்து சென்ற தனது தந்தையை பின் தொடர்ந்து சிறுவன் சுமித்திரன் சென்றிருக்கிறான். மகன் வருவதை கவனிக்காமல் உமையராஜ் கடற்கரையில் நின்ற நாட்டுப்படகில் ஏறினார். தந்தையுடன் செல்லும் ஆசையில் சிறுவன் சுமித்திரன் கடலுக்குள் நடந்து சென்றான். அப்போது அவன் கடல் அலையில் சிக்கி மூழ்கினான்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உமையராஜிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடலுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி கிடந்த தனது மகனை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றார். அங்கு சிறுவன் சுமித்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து கீழக்கரை கடலோர காவல் படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.