கீழக்கரை ஜன, 10
மிகப்பெரிய மாநகராட்சி ஊர்களில் கூட போக்குவரத்தை நேரம் ஒதுக்கி சரி செய்துவரும் வேளையில் கீழக்கரை நகராட்சியில் மட்டும் ஏன் இந்த அவல நிலை?
காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி,கல்லூரி வாகனங்கள் மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பெரிதும் இடையூறாய் இருப்பது குடிநீர் லாரிகள் என ஒட்டு மொத்த மக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது தண்ணீர் லாரிகளோடு கீழக்கரை நகராட்சி குப்பை லாரியும் இணைந்து கொண்டு கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டிய காவல்துறையோ மௌனம் காக்கிறது.போதுமான காவலர்கள் இல்லையெனும் ஒற்றை வரி பதிலோடு தனது கடமையை முடித்துக்கொள்கிறது காவல்துறை நிர்வாகம்.
இதுகுறித்து கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதாவிடம் நமது செய்தியாளர் கேட்டபோது, “விரைவில் அனைத்து குடிநீர் லாரி உரிமையாளர்கள்,காவல்துறை அதிகாரிகள்,சமூக நல ஆர்வலர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காணப்படும்” என்றார்.
இனியும் காலம் தாழ்த்தாமல்,போர்க்கால அடிபடையில் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்தால் மட்டுமே உரிய நேரத்தில் மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்