கீழக்கரை ஜன, 3
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்தும் குடிநீர்,சுகாதாரம்,சாலை வசதி, தெருவிளக்கு,கழிவு நீர் வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவும் செயல்பாட்டில் இல்லாமலும் இருப்பதால் நகராட்சி தரமுள்ள ஊரை சமூக நல ஆர்வலர்கள் கீழக்கரையை கிராமம் எனக்குறிப்பிட்டு சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
எந்தவொரு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலும் அதில் திட்டமிடல் இல்லாத நிலையைப்போன்று நகராட்சி நிர்வாகமும் ஒப்பந்ததாரர்களும் செயல்படுவது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழிவு நீரை வெளியேற்றும் முயற்சியில் பொதுமக்களே தங்களது சொந்த செலவில் வாறுகால் குழாய் அமைப்பதும் நடக்ககூட முடியாத நிலையில் குறுகலான தெருக்களில் தடுக்கி விழும் வகையில் ஆபத்தான முறையில் உயரத்தில் குழாய் அமைத்து வரும் பரிதாப நிலைகண்டு சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பழுதான அம்மா உணவகத்தின் மேற்கூரை இன்று வரை சரிசெய்து கொடுக்காமல் இழுத்தடிக்கும் ஒப்பந்ததாரருக்கு பில் பாஸ் செய்யும்? அவலநிலையும் நீடிக்கிறது.
ஊரெங்கும் குண்டும் குழியுமான சாலைகளால் பள்ளி மாணவர்கள்,பெரியவர்கள்,பெண்கள் என பலரும் சிரமப்படுகின்றனர்.
இத்தகைய அவலநிலை கொண்ட கீழக்கரை நகராட்சியை தான் சமூக ஆர்வலர்கள் கிராமம் என அழைக்கின்றனர். தற்போதைய காலத்தில் கிராமங்களே தன்னிறைவு பெற்று வரும் போது கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் ஏன் இந்த பரிதாப நிலை? என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.
இந்த செய்தி தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர் அரூஸி/ மாவட்ட நிருபர்.