கீழக்கரை டிச, 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
துணை ஆணையர் அமர்வதற்கு புதிய இருக்கை மற்றும் மேஜை வாங்குவது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான காணொளி குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர் 19 வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு மேலத்தெரு தனியார் அமைப்பு கொடுத்த இடம் பாதுகாப்பானதல்ல என்றும் அதற்கு பதிலாக 20 செண்ட் நிலம் வேறொரு இடத்தில் தரப்படும் என்ற தனியார் நிறுவனத்தின் உத்தரவாதம் குறித்து நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி என்னவென கேள்வியெழுப்பினார்?
தற்போது டிசம்பர் மாதம் என்பதால் ஊரில் நிறைய கல்யாணங்கள் நடைபெறுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் ஒரு பத்து நாட்களுக்காவது போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கவுன்சிலர் சேக் உசேன் கோரிக்கை வைத்தார்.
போக்குவரத்து நெரிசல் என்பது டிசம்பர் மாதத்தில் மட்டுமல்ல,டிசம்பருக்கு நிகராக மே மாதத்திலும் நமதூரில் நிறைய திருமணங்கள் நடைபெறுகிறது.பல்வேறு ஊர்களில் இருந்தும் வேலை நிமித்தமாக கீழக்கரைக்குள் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதாலும் வாகனங்கள் பெருகி விட்டதாலும் 365 நாட்களுமே போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது.
இத்தகைய போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண்பதே அவசியம் என திமுக கவுன்சிலர் நசுருதீன் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கவுன்சிலர் சேக் உசேனுக்கும் திமுக கவுன்சிலர் நசுருதீனுக்கும் கடும் வாக்குவாதம் முற்றியது.
திமுக கவுன்சிலர் நசுருதீனை பார்த்து “நாய் குணம் புடிச்சவனே போ” என கவுன்சிலர் சேக் உசேன் கடும் வார்த்தையை கொண்டு பேசியது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் பாதுஷா இப்படி சக உறுப்பினரை வசை பாடுவது நாகரீகமற்ற செயல் என குறிப்பிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
கடந்த காலங்களில் பாரம்பரியமிக்க பல்வேறு ஆளுமைகள் ஆட்சி செய்த கீழக்கரை நகர்மன்ற கூட்டரங்கில் கண்ணியம் காற்றில் பறந்து வசைபாடுகள் கோலோச்சும் நிலை கண்டு பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் செய்வதறியாது விக்கித்து நின்றனர்.
சக கவுன்சிலரை ஓர்மையில் வசைபாடிய கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே பெரும்பாலான பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி / மாவட்ட நிருபர்.