கோயம்புத்தூர் ஆகஸ்ட், 22
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் வில்சன், மாவட்ட செயலாளர் புனிதா, ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றினார்.
இந்த மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகை மிகத் தாமதமாக வழங்கப்படுகிறது. சில நேரம் பல மாதங்கள் சேர்த்து மொத்தமாகவும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் உதவித் தொகை முறையாக வழங்கப்படாததால் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது.
எனவே மாதந்தோறும் முறையாக உதவித் தொகை வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்ல, சாய்தளம் அமைக்க வேண்டும். வேலை வாய்ப்பில், 4 சதவீதம் இட ஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும். விண்ணப்பித்த ஒரே நாளில் அனைத்து விதமான சான்றிதழ்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.