அக், 23
அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொரியை வைத்து இனிப்பு முதல் காரம் வரை பல வகையான சிற்றுண்டிகளை தயார் செய்யலாம். கார பொரி, பொரி உருண்டை, பேல் பூரி போன்ற பல சிற்றுண்டிகள் பொரியை மூலமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பொரி பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பொரி சமீப நாட்களாக காண்பது அரிதாகி விட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே இதை பார்க்க முடிகிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக இதுபோன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொரியை சாப்பிட கொடுக்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
எண்ணெய் மற்றும் துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகிறது. அதிக எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் செரிமானம் தடைபட்டு மலச்சிக்கல் அல்லது உப்புசம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். செரிமான மண்டலம் சீராக செயல்பட இது போன்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். இதற்கு பதிலாக நல்ல பாக்டீரியாக்கள் உள்ள பொரியை சாப்பிடலாம். இது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.
வயது கூடும் பொழுது, உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் சீராக கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற தீவிர உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளுடன் பொரியையும் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
எளிதில் ஜீரணமாக கூடிய இந்த பொரியில் மிகக் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளன. இதன் மூலம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கலாம். இதற்கு பொரியை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதுடன் ஒரு சில உடற்பயிற்சி அல்லது உடற் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் எடை மற்றும் கொழுப்பையும் குறைக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த பொரி செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. ஒரு சுகாதார அறிக்கையின்படி 100 கிராம் பொறியில் 17 கிராம் நார்ச்சத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. வயிறை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலையும் பெறலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால் வயிறும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பொரியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்துள்ளன. மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள் யாவும் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.