கீழக்கரை அக், 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும் 20 அடி உயரத்தின் மீது செல்போன் டவர் அமைத்தால் அதன் கதிர்வீச்சுகள் சுற்றியுள்ள மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி முழுவதும் கடும் பாதிப்பினை உண்டாக்குமென்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
டவர் அமைப்பதற்கான சுற்று சூழல் மற்றும் நகராட்சியின் உரிய அனுமதி பெறாமலேயே செல்போன் அமைப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க கூடாது என வலியுறுத்தி நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி கீழக்கரை தாலுகா வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு நேரில் சென்று செல்போன் டவர் அமைக்கும் வீட்டினை ஆய்வு செய்தனர்.
இதனைக் கேள்விபட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டு செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க கூடாதென வட்டாட்சியரிடம் கூறினர்.
பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றதோடு செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் வட்டாட்சியர் பழனிக்குமார்.
நெருக்கடி மிகுந்த இடங்களில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சியினை தனியார் செல்போன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டுமென்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.
குறிப்பு: செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த பகுதியின் 21வது வார்டு திமுக கவுன்சிலர் சித்தீக் செல்போன் டவர் அமைக்க கூடாதென்றும் அதற்காக போராடும் மக்களோடு ஒருவராக தாமிருப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.