சென்னை ஜூலை, 28
மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘மனநலம்-உடல்நலம்’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் 3 மாதத்துக்கு ஒரு முறை 2 அரசு டாக்டர்கள் சென்று மாணவ-மாணவிகளுக்கு மனநலம்-உடல்நலம் குறித்து தன்னம்பிக்கை ஊட்ட உள்ளனர்
மனநலம்-உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு தலைமை தாங்கி பேசினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நான், அதில் இருந்து சிறிது குணமடைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும், உடல் சோர்வு என்பது சற்று இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கும்போது அதெல்லாம் பறந்து போய்விடுகிறது. முழுநலம் பெற்றதாக நான் உணர்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலையிலேயே எல்லோரும் சீக்கிரமாகவே புறப்பட்டு இங்கே வந்திருப்பீர்கள். நீங்கள் எல்லாம் காலை உணவு சாப்பிட்டீர்களா?. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றபோது, பலமுறை சாப்பிடாமல் பள்ளிக்கு போயிருக்கிறேன். ஏனென்றால், பஸ் பிடிக்க வேண்டுமென்பதால், அது ஒரு சூழ்நிலை. இது நகரப்பகுதி, ஆனால், கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களை எண்ணிப்பார்க்கிறபோது, எந்த அளவுக்கு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான பிள்ளைகள் காலையில் புறப்படும்போது சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.
அதிகாலையில் அவசர, அவசரமாக நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி வரவேண்டிய சூழல் இருப்பதை மனதில் வைத்து அதிலும் குறிப்பாக, 1-வது முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாடு அரசு தொடங்கப்போகிறது. அதற்கான அரசாணையில் நேற்று (நேற்று முன்தினம்) தான் நான் கையெழுத்து போட்டு வந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என கூறினார்.