சென்னை ஆகஸ்ட், 16
சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த மாதம் 31 ம்தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ”ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும் கனல் கண்ணனின் இந்த சர்சைக்குரிய கருத்தை வைத்து, அவர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் கடந்த 4 ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவலர்கள் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கனல் கண்ணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை நேற்று சென்னை காவல கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.