ஆகஸ்ட், 16
அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டனர். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர்.
இது ரஜினிக்கு 169வது படம். படப்பிடிப்பை அடுத்த சில தினங்களில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் வேறு படங்களில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினி ஜோடியாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபலியில் நடித்து பேசப்பட்டார். தற்போது 3 இந்தி படங்களும் 2 தெலுங்கு படங்களும் கைவசம் வைத்து நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன் இன்னொரு நாயகியாக வருகிறார். ரஜினியுடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து 1999ல் வெளியான படையப்பா படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிக்கு வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.