கீழக்கரை மார்ச், 29
சிறப்பு தொகுப்பு:-
கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆலிம்கள்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு துணை இருப்பவர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரமலான் நோன்பு வைப்பதற்கான சஹர் உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செய்யது அகமது கபீர் நமது வணக்கம் பாரதம் நிருபரிடம் கூறும் போது,
12 பேர் கொண்ட இளைஞர் கூட்டம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 600ல் இருந்து 700 பேர் வரைக்கும் இலவச உணவு வழங்குகிறோம்.
பெரும்பாலும் நேரில் வந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மருத்துவமனையில் இருப்பவர்கள், வீடுகளில் ஆண் உதவி இல்லாத தாய்மார்களுக்கு எங்கள் அமைப்பின் இளைஞர்கள் வீடு தேடி போய் உணவை வழங்கி வருகின்றனர்.
இலவச உணவு வழங்குவதில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எங்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை என்றவர் நல்லுள்ளம் கொண்ட ஈகையாளர்கள் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவுக்கான பொருளாகவோ வழங்கினால் ரமலான் முழுவதும் இலவச உணவு வழங்க வேண்டுமென்னும் எங்களின் லட்சியம் நிறைவேற உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் இவ்வமைப்பின் பாஹிம், ஹமீது, சாலிம், நுஸைர், ஜியாவுல், ஷஹாதத், பாக்கர், முஜீபுரஹ்மான், காசீம், ஹம்தான், ஜெய்னுலாப்தீன் இவர்களுடன் கீழக்கரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இணைந்து இரவு 11.30 மணி முதல் 2.30 மணி வரை உணவு வழங்கும் சிறப்பான பணியை சேவையாக செய்து வருகின்றனர்.
போதைக்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைஞர்களுக்கு மத்தியில் தூய பொதுசேவைகளின் மூலம் சிறந்த எடுத்துக்காட்டாக வாழும் இந்த இளைஞர்களின் ரமலான் முழுவதும் இலவச சஹர் உணவு வழங்கிடும் இவர்களை நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பாக மனதார வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.