12வது வார்டு கவுன்சிலரின் குற்றச்சாட்டுக்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் மறுப்பு!
கீழக்கரை மார்ச், 02
கடந்த 28.02.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 12 வது வார்டை தலைவர் புறக்கணிப்பதாகவும் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை என்றும் 2022 ஜூன் மாதம் கொடுத்த தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் 12வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி(எ)உம்முசல்மா பேசினார்.
இதுகுறித்த முழு விபரமும் வணக்கம் பாரதம் இதழில் வெளியாகி இருந்தது. இதற்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மறுப்பு தெரிவித்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-
12வது வார்டை புறக்கணிப்பதாக கவுன்சிலர் கூறுவது முற்றிலும் தவறானதாகும். அனைத்து வார்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். நிதிநிலையை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு வார்டுக்குமான முக்கிய பணிகளை நிறைவேற்றி கொடுத்து வருகிறேன்.
நாங்கள் பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் 12வது வார்டு மக்களுக்கான அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்பு பணிகளை 13.88லட்சத்தில் நிறைவேற்றி கொடுத்துள்ளோம் என்றவர், (இதற்கான ஆவண நகலையும் நமக்கு தந்துள்ளார்)
இதேபோன்று பணிகளின் முக்கியத்துவம் கருதி ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான கட்டமைப்பு பணிகளை உரிய நிதி ஒதுக்கீடு பெற்று செய்து கொண்டிருக்கிறோம்.
12வது வார்டு கவுன்சிலரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை அந்த வார்டு மக்கள் நன்கு அறிவர் என்றும் கீழக்கரை நகர்மன்ற தலைவர் கூறியுள்ளார்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.