Spread the love

கடலூர் ஆகஸ்ட், 13

விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.

அப்போது சக்திவேல் என்பவர் கொடுத்த மனுவில் எனது வீட்டுக்கு அருகே வசித்து வரும் இருளர் மக்களுக்காக தனி சுடுகாடு உள்ளது. இதற்கு செல்ல தனி பாதை வசதியும் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருளர் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி மனைவி ரம்யா என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை பயன்படுத்தாமல் எங்களுக்குப் பாத்தியமான நிலத்தில் அத்துமீறி பிரவேசித்து, கரும்பு பயிர்களை சேதப்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சென்றுள்ளனர்.

எனவே இதற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலத்தில் எங்களுடைய நிலத்தில் அத்துமீறி பிரவேசிக்காத வகையில், எங்களின் மகசூலுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் துணை மாவட்ட ஆட்சியர் பழனியிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *