கீழக்கரை மார்ச், 01
கீழக்கரை நகர்மன்ற கூட்டம் நேற்று தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கவுன்சிலர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதும், 1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா எழுந்து நகராட்சிக்கான வருவாயில் சொத்து வரி மிக முக்கிய பங்காற்றும் வேளையில் பல லட்சங்கள் வரி நிலுவையில் இருப்பதாலும் அதனை அந்தந்த வார்டு கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு அலுவலர்கள் வசூலிக்க ஆவண செய்யப்படும் என கடந்த டிசம்பர் மாத கூட்டத்தில் ஆணையர் கூறினார்.
வார்டு குளறுபடியால் எந்த வார்டில் எந்த கவுன்சிலர் வரி வசூலிக்க உதவிட முடியும்?முதலில் வார்டு குளறுபடிகளை சரி செய்யுங்கள் பிறகு வரி வசூல் செய்வது குறித்து ஆலோசிக்கலாம் என அப்போதே எதிர்ப்பு தெரிவித்தேன்.
எனது 1வது வார்டுக்குள் நான்கு வார்டு மக்கள் வசிப்பது போல் மறுவரையறை என்னும் பெயரில் வார்டுகளை பிரித்து குளறுபடிகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.கடந்த கூட்டத்தில் இரண்டு மாதங்களுக்குள் வார்டு குளறுபடிகள் சரிசெய்யப்படும் என ஆணையர் கூறினார் சரிசெய்யப்பட்டு விட்டதா? என கவுன்சிலர் பாதுஷா கேள்வி எழுப்பியதும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதம் முன்பே வார்டு குளறுபடிகள் சரிசெய்யப்படும் என ஆணையர் செல்வராஜ் கூறியதும் இதற்கு எழுத்து பூர்வமாக பதில் தரும் வரை நான் உள்ளிருப்பு போராட்டம் செய்வேன் என்றவர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார்.
தலைவர் மற்றும் துணை தலைவர் விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமாதானம் கூறிய பின்னர் தர்ணாவை கவுன்சிலர் விலக்கி கொண்டார்.
18வது வார்டு SDPI கவுன்சிலர் சக்கினா பேகம் தீர்மானம் பொருள் எண்:13ல் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் மூலம் 1024 தெருவிளக்குகளை LED விளக்குகளாக மாற்றம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி 108.83 லட்சம் என தீர்மானித்துள்ளீர்கள்.
சராசரியாக ஒரு விளக்கின் விலை 10 ஆயிரத்துக்கும் மேல் வருகிறது இவ்வளவு பெரிய தொகையா LED விளக்குகளுக்கு வருகிறது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திட்டமதிப்பீட்டு அலுவலர் சாம்பசிவம் ஒரு விளக்கு என்பது வெறும் பல்பு மட்டுமல்ல அதற்கான பிரேம்,ஹோல்டர்,வயர் என அனைத்தையும் சேர்த்து தான் என்றவர் ஒரு தெருவிளக்கை LED பல்பாக மாற்றுவதற்கு மின்வாரியத்துக்கு தலா 10 ஆயிரம் கொடுக்க வேண்டி வருமென்றார்.
ஏற்கனவே நகராட்சியால் பணம் செலுத்தப்பட்டு மின்வாரியத்தின் ஒப்புதலோடு இணைப்பு பெற்றுள்ள மின்கம்பங்களுக்கு திரும்பவும் பணம் செலுத்தவேண்டுமென்று சொன்ன பதில் யாருக்குமே திருப்திகரமாக இல்லை என்பதே அனைவரின் கூற்றாக உள்ளது.
என்ன செலவு?எதற்கான செலவு?போன்ற முழு விபரத்தையும் எழுத்துப்பூர்வமாக தரவேண்டுமென்றார் கவுன்சிலர் சக்கினா பேகம்.18 வது வார்டில் ஃபேவர் பிளாக் கற்கள் பதிப்பதாக கூறிவிட்டு குறிப்பிட்ட சந்துகளில் பதித்து விட்டு இரண்டு சந்துகளில் கற்கள் பதிக்காமல் விட்டதால் அந்தப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
வேலை செய்தால் முழுமையாக செய்யுங்கள் பெயரளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக செய்யாதீர்கள் என்றார் கவுன்சிலர் சக்கினாபேகம்.
12 வது வார்டில் செய்யப்படும் பணிகள் குறித்த தகவல் அந்த வார்டின் கவுன்சிலரான எனக்கே தெரிவிப்பதில்லை எனவும் எனது வார்டுக்கான பணிகளுக்கு கடந்த 2022 ஜூன் மாதம் கொடுத்த தீர்மானம் இதுநாள் வரை நிறைவேற்றாமல் புறக்கணிக்கப்படுவதாக திமுக கவுன்சிலர் உம்முசல்மா குற்றம் சாட்டினார்.
நீங்கள் வார்டு மக்களை சந்திப்பதில்லை அதனால் தான் அந்த வார்டு மக்கள் தலைவராகிய என்னிடம் நேரில் கோரிக்கை வைக்கின்றனர்.அதற்கு நான் தீர்வு காணுகிறேன் என திமுக சேர்மன் செஹனாஸ் ஆபிதா பதிலளித்தார்.
இதுகுறித்து நாம் கவுன்சிலர் ராணி(எ)உம்முசல்மாவை தொடர்பு கொண்டு நகர்மன்ற தலைவர் கூறியபடி நீங்கள் வார்டு மக்களை சந்திப்பதில்லையா?என கேள்வியை முன் வைத்தோம்.
தலைவரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுத்தவர் தினமும் காலை 8 மணி முதல் மாலை நேரம் வரை வார்டில் வலம் வந்து கொண்டிருக்கிறேன்.மக்களின் குறைபாடுகளை கேட்டு அதற்கான தீர்வையும் பெற்றுக்கொடுக்கின் என்றார் கவுன்சிலர் உம்முசல்மா.
இந்த வார்டின் திமுக செயலாளராக இருக்கும் சுப்யான் என்பவர் நானும் கவுன்சிலரும் தலைவரை பலமுறை சந்தித்து எங்கள் வார்டுக்கு வாருங்கள் அதில் உள்ள குறைகளுக்கு தீர்வு காணுங்கள் என அழைத்தும் அவரோ இதுநாள் வரை எங்கள் வார்டுக்கு வராமல் தினமும் மக்கள் பணி செய்யும் கவுன்சிலரை குறை சொல்வது நியாயமல்ல என்றார்.
மேலும் கூட்டத்தில் திட்டமதிப்பீட்டு அலுவலர் சாம்பசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.21வது வார்டு கவுன்சிலர் சித்தீக் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.