Spread the love

சென்னை பிப், 24

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காலை 9.30 மணியளவில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 1948ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே சினிமா துறையின் மீதிருந்த ஆர்வம் அவரை பிரபலமான கதாநாயகியாக மாற்றியது. சினிமா ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் கல்வியிலும் இவருக்கு அதீத ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் அவரை மாநில அளவில் முதல் மாணவியாக உயர்த்தியது.

கல்வி, சினிமா என்று வளர்ந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் சினிமாவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். வெண்ணிற ஆடையில் தொடங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிராதனமாக எம்ஜிஆருடனும், அவரை தவிர்த்து சிவாஜி, ஜெய்சங்கர் முத்துராமன் போன்றோருடனும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவுண்டபோது அதனை ஒருங்கிணைத்தவர் ஜெயலலிதாதான்.

பின்னர் அவருக்கு அரசியலில் வெற்றி முகமே இருந்தது. 1991, 2001, 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற செய்து தொடர்ந்து 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றன. அதில் முக்கியமானது, இலவச ரேஷன் அரிசி, மகளிர் காவல் நிலையம், அம்மா உணவகம் ஆகியவையாகும். கல்வி, திரைத்துறை, அரசியல் என இவர் கால் பதித்த இடங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை காலை 9.30 மணியளவில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்கிறார். பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார். அதேபோல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டப்படுகிறது. இன்று மாவட்டம் தோறும் கண்தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டிகள்நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்தல், இலவச திருமணங்கள் நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு உணவு வழங்குதல், வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமை அலுவலகம் உத்தரவிப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவிர புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அதிமுக தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *