கோவை டிச, 14
கோவை மாவட்ட சுமை பணி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3000 பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன் பெறும் வயதை 55 ஆக மாற்ற வேண்டும். டாஸ்மாக் குடோனில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.