கோவை டிச, 8
கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம்தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு இணையதளம் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு வரும் அங்கீகாரத்தை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து தொடா்ந்து நிதியுதவியை விவசாயிகள் பெறலாம். இதற்காக அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.