பெரம்பலூர் நவ, 27
பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கராஜ் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி சாலையோர வியாபாரிகளின் பிரச்சினைகளை களைந்திட வேண்டும். வெண்டர் கமிட்டி கூட்டத்தை மாதந்தோறும் நடத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சரக்கு வாகனங்களில் விற்பனை செய்யும் திடீர் கடைகளை அகற்றிட வேண்டும். தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்றிட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.