திருவண்ணாமலை நவ, 27
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதியில் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.