Spread the love

பர்மிங்காம்‌ ஆகஸ்ட், 8

72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது.

இன்றுடன் இந்த விளையாட்டு திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை வென்று ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

குத்துச்சண்டையில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை நீது கங்காஸ் இங்கிலாந்தின் டேமி ஜாட் டெஸ்டானை எதிர்கொண்டார். இதில் எதிராளி மீது சில துல்லியமான குத்துகளை விட்டு தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நீது, 9 நிமிடங்களும் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். முடிவில் நீது 5-0 என்ற கணக்கில் டெஸ்டானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். அரியானாவைச் சேர்ந்த 21 வயதான நீது, இளையோர் உலக சாம்பியன் ஆவார்.

இதனைத் தொடர்ந்து, ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் கியரன் மெக்டொனால்டை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு, அமித்தை விட அதிக உயரம் போன்ற சாதகமான அம்சங்கள் இருந்த போதிலும் மெக்டொனால்டால் சமாளிக்க முடியவில்லை. 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றிருந்த அரியானாவைச் சேர்ந்த 26 வயதான அமித் பன்ஹால் இந்த முறை அதை தங்கமாக மாற்றிகவனத்தை ஈர்த்துள்ளார்.

இதே போல் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்க்கப்பட்டது போலவே, உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீனின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்தது. அவர் இறுதி சுற்றில் வடக்கு அயர்லாந்தின் கேர்லி மிக்நாலுடன் கோதாவில் குதித்தார். எதிராளி ஆக்ரோஷமான பாணியை கையாண்ட போதிலும் நிகாத் ஜரீன் சாதுர்யமாக செயல்பட்டார். ஏதுவான வாய்ப்புகளில் எதிராளிக்கு விட்ட குத்துகள் வெற்றியை தேடித்தந்தது. அவர் 5-0 என்ற கணக்கில் வாகை சூடினார். தெலுங்கானாவை சேர்ந்த 26 வயதான நிகாத் ஜரீன் காமன்வெல்த் விளையாட்டில் ருசித்த முதல் பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில் தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிட்டியது. ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்பில் (மும்முறை தாண்டுதல்) அரிய சாதனையாக டாப்-2 இடங்களை இந்தியர்கள் பிடித்து பிரமாதப்படுத்தியுள்ளனர். தனக்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளில் 3-வது முயற்சியில் அதிகபட்சமாக 17.03 மீட்டர் தூரம் நீளம் தாண்டிய இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் ஆண்களுக்கான டிரிபிள் ஜிம்ப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். அவரை விட சற்று பின்தங்கிய மற்றொரு இந்திய வீரர் கேரளாவின் அப்துல்லா அபூபக்கர் (17.02 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் பெர்முடாவின் ஜா நிஹாய் பெரின்சீப்புக்கு (16.92 மீட்டர்) வெண்கலம் கிடைத்தது. மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.89 மீட்டர் தூரம் தாண்டி 4-வது இடத்தை பெற்றார். ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில்இந்தியாவின் சந்தீப்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதி சுற்றில் 8 வீராங்கனைகள் களம் கண்டனர். இதில் இந்தியாவின் அன்னு ராணி 60 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். பெண்களுக்கான ஆக்கியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதியது. இதில் வெற்றியோடு வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் எதிரணியின் 3 வாய்ப்புகளை இந்திய கோல் கீப்பர் சவிதா சூப்பராக தடுத்து நிறுத்தி, கதாநாயகியாக ஜொலித்தார்.

காமன்வெல்த் விளையாட்டில் இந்திய பெண்கள் ஆக்கி அணி பதக்கம் வெல்வது 16 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் தங்கமும், 2006-ம் ஆண்டில் வெள்ளியும் இந்திய அணி வென்றிருந்தது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்ஹால்-லியாம் பிச்போர்டு கூட்டணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. போராடி தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 61 தங்கம், 52 வெள்ளி, 52 வெண்கலம் என்று மொத்தம் 165 பதக்கங்களுடன் கம்பீரமாக முதல் இடத்தில் பயணிக்கிறது. இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என்று 49 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *