வண்டலூர் நவ, 15
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டு மகாலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் முகாமிட்டு மழைநீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை கொட்டும் மழையிலும் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் மழைநீர் சாலையில் தேங்காமல் கால்வாய் வழியாக அடையார் ஆற்றுக்கு செல்கிறது. கொட்டும் மழையிலும் பணி செய்யும் நகராட்சி ஊழியர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.