வண்டலூர் நவ, 6
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் காரணைப்புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்ற வாலிபருக்கும் பாலாஜிக்கும் முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகோபால், பாலாஜியை கத்தியால் மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பாலாஜியை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கத்தியால் குத்தி கொலை செய்த நந்தகோபாலை வலை வீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று நந்தகோபாலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.