திண்டுக்கல் அக், 22
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார், பஸ், வேன் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
அதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. எனினும் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் மண்சரிவு இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சவரிக்காடு அருகே மண்சரிவாகி மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மண்மூட்டைகள் சரிந்து விழுந்தன. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு மீண்டும் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.