Spread the love

நெல்லை அக், 15

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் திருவேங்கடநாத புரத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு கருட வாகனத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

ஏற்கனவே கடந்த மூன்று சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்கள் மற்றும் நவதிருப்பதி கோவில்களுக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 4வது சனிக்கிழமையான இன்றும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் பயணம் செய்த பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டன. தண்ணீர் பாட்டில், மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *