ராணிப்பேட்டை அக், 14
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறை பணிகளின் முன்னேற்றங்களை கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். கடந்த மாதம் அளித்த முன்னேற்ற பணிகள் விவரம் மற்றும் தற்போது ஒரு மாதகாலத்தில் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளின் முன்னேற்றங்களை கேட்டு அறிந்தார்.
மேலும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவை பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளின் நிலுவை, முன்னேற்றங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பணிகளை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், காலதாமதங்கள் குறித்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.