திருப்பூர் அக், 11
ரூ.10 கோடியில் அமையும் திருப்பூர் ஏற்றுமதி குழும திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று பின்னர் முதல் செயற்குழு கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், திறன்மிகுந்த தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.