Spread the love

ராணிப்பேட்டை அக், 4

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி எலேட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்ட்ஸ் ஆப் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனைகளில் இடம் பெறும் வகையில் இந்த பனை விதைகள் நடவு செய்யும் பணியானது 288 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டிருந்த 880 இடங்களில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்தப் பனை விதைகள் அனைத்தும் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே கடந்த 3 மாதகாலமாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் என சுமார் 80,000 நபர்களால் சேகரிக்கப்பட்டு தற்போது நடப்பட்டது. இப்பணிகளை 4 உலக சாதனை நிறுவனங்களின் 8 ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 5 மணி நேரத்தில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு சாதனை புரிந்தமைக்காக உலக சாதனை அங்கீகாரம் வழங்கினர். அதற்கான உலக சாதனை சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மாபெரும் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம், கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இந்த உலக சாதனை இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *