சென்னை செப், 23
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனர் தாமரைக்கண்ணன், உளவுப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால், நிர்வாகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான உயர் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர்.
பின்னர் காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் காவல் துறையினரிடம் குறைகளை கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். 4 பெண் காவல்துறையினர் உள்ளிட்ட 10 காவல்துறையினரிடம் மனுக்களை பெற்றார். உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை காவலர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அவர்களில் எத்தனை பேரின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ‘பணி இடமாறுதல், ஊதிய முரண்பாடு மற்றும் தண்டனையை குறைத்தல் போன்றவை தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில், தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் 800 பேர் உடனடி பலன் அடைந்தனர்.