Spread the love

கடலூர் செப், 22

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 630 மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா மேலும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடங்களுக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக நேற்று காலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ஆகியோர் குண்டு சாலையில் உள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள், சமையலர்களிடம் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சமையலுக்கு தேவையான உணவு பொருட்களின் இருப்பு கையேட்டை ஆய்வு மேற்கொண்டு, கையேட்டில் உள்ளபடி சரியான முறையில் பொருட்கள் இருப்பு உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் உணவு தயாரிக்கும் சமையல் அறை தூய்மையாக பராமரிக்கப்படுகின்றதா மாணவர்களுக்கு காலை உணவு அரசு அறிவுறுத்தியுள்ள வார நாட்குறிப்பேட்டில் தெரிவித்துள்ளவாறு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

இதையடுத்து கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் தங்கராஜ்நகர் ஆகிய பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என பார்வையிட்டதுடன், உணவு பரிமாறி, சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் கீதாகுணசேகரன், சங்கீதா, மாணவரணி பாலாஜி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *