திருவண்ணாமலை செப், 15
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் விளைசித்தேரி கிராமத்தின் சாலையோரம் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பம் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் என்பது உறுதியானது. அத்துடன் கோவிலுக்கு அருகிலேயே விஷ்ணு அல்லது சிவன் எனக் கருதக்கூடிய சிலையொன்றும் உள்ளது. இதே போல துந்தரீகம்பட்டு கிராமத்தில் சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர்கள் கலைப்பாணியிலான கொற்றவை சிற்பம் ஒன்று உள்ளது. விளைச்சித்தேரி கிராமத்தில் உள்ள காளியம்மன் சிற்பம் பல்லவர்கால மக்கள் வழிபட்ட கொற்றவைச் சிலையாகும்.
இதன் அருகில் மேற்குப்புறமாக, பிற்கால பல்லவர் கலைப்பாணியிலான சிலையொன்று காணப்படுகிறது. இச்சிற்பம் விஷ்ணு அல்லது சிவனாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர். துந்தரீகம்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் விளைநிலத்தில் கொற்றவை எனும் காளி சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது. இச்சிலை கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர்காலத்தை சார்ந்த கொற்றவை சிற்பம் எனக் கண்டறியப்பட்டது. எனவே இப்பகுதிகள் பல்லவர்கள் ஆட்சியின்கீழ் இருந்துள்ளது என்பதை உறுதிசெய்வதற்கான முக்கியத் தரவுகளாக இச்சிற்பங்கள் உள்ளது. இந்த தகவலை படவேடு பகுதியில் வசிக்கும் சம்புவராய ஆய்வு மைய செயலாளர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.