ஐதராபாத் செப், 15
தெலங்கானா அரசின் தலைமை செயலகம் 132 ஆண்டுகளாக சைபாபாத் நிஜாம் நவாப்களின் அரண்மனையாக இருந்து வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 16 முதல்வர்கள் ஆட்சி செய்தனர். தனி தெலங்கானாவாக உருவான பிறகு 2வது முறையாக சந்திரசேகரராவ் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். 25 ஏக்கர் நிலப்பரப்பில், 10 லட்சம் சதுர அடியில் 132 ஆண்டுகளாக பல கட்டிடங்களில் 10 பிளாக்குகளாக தலைமை செயலகம் செயல்பட்டது.
இதில், மிகவும் பழமையான ஜி-பிளாக் 1888ம் ஆண்டில் 6வது நிஜாம் நவாப் ஆட்சியின்போது கட்டப்பட்டது. பின்னர், 2003ல் டி-பிளாக், 2012ல் எல்-பிளாக், வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டிடம் கட்டப்பட்டு தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த கட்டிடங்கள் பழமையானதாகவும் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ரூ.500 கோடியில் புதிய தலைமை செயலகம், சட்டப்பேரவை கட்ட முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார்.
இந்தநிலையில், தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டுகிறது மாநில அரசு. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.