நெல்லை செப், 15
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. 13 வயது, 15 வயது, 17 வயது என 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை மாநகராட்சி துணைமேயர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு 10 கிலோமீட்டர் தூரம், 15 வயது பிரிவினருக்கு 15 கிலோ மீட்டர் தூரம், 17 வயது பிரிவினருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அண்ணா விளையாட்டரங்கம் முன்பிருந்து ஐகிரவுண்டு பின்புறம் சாலை வழியாக பல்நோக்கு மருத்துவமனை, திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் வரை சென்று அதே பாதையில் திரும்பி விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.
போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரையிலான இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 என பரிசுகள் வழங்கப்படுகிறது.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி செய்திருந்தார்.