புதுக்கோட்டை ஆகஸ்ட், 1
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் ஒவ்வொரு பகுதியாக 10 பேர் முதல் 25 பேர்கள் வரை இணைந்து மொய் விருந்துகள் நடத்துவது வழக்கமாக உள்ளது.
அதாவது 5 ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சிறு சேமிப்பு போல மொய் விருந்துகள் நடத்தும் உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தி பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு கறி விருந்து கொடுத்து மொத்தமாக வசூலிப்பது மொய் விருந்து என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கஜா புயல், கொரோனா காரணங்களால் மொய் விருந்துகளில் சிக்கல் ஏற்பட்டு சில ஆண்டுகளாக தடைபட்டிருந்ததால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மொய் விருந்துகள் நடத்தப்படுகிறது. ஆனால் எதிர்பார்க்கும் அளவிற்கு மொய் வசூல் இல்லை என்றும் 50 சதவீதம் பேர் மொய் வரவு செலவை தொடர விரும்பாமல் செய்த மொய் பணத்தை மட்டுமே திருப்பி செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஒரு மாவட்டக் கல்வி அலுவலர், ஒரு பேராசிரியர், 5-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என 14 பேர் இணைந்து நேற்று மொய் விருந்து நடத்தினார்கள்.
இதே போல கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து நடத்தும் மொய் விருந்துகள் அடிக்கடி நடப்பதும் வழக்கமாக உள்ளது. மேலும் கடந்த காலங்களைப் போல மொய் வசூல் இல்லை என்றும் குறைந்து வருவதாகவும் மொய் செய்ய வந்தவர்கள் கூறுகின்றனர்.
#Vanakambharatham #Pudukkottai #news