ஈரோடு ஆகஸ்ட், 1
ஈரோடு பாரம்பரிய விளையாட்டான தாயம் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் ஆர்வமுடன் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பாரம்பரிய விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, கோலி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.
இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டுக்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து வருகிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியில் கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி விடுகின்றனர். இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர் கூட தெரியாது. பெரியவர்கள் கூறினால் உடனே இணைய தளத்தில்தான் தேடச்செல்வார்கள். தாயம் போட்டி இந்தநிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுப்பதற்காகவும், இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் ஈரோட்டில் தாயம் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்தனர்.
முதல் கட்டமாக நேற்று 250 பேருக்கு தாயம் போட்டி ஈரோடு பெரியார் நகரில் சிறப்பாக நடைபெற்றது. 40 ஜோடியினர் ஒரே நேரத்தில் விளையாடும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று தாயக்கட்டைகளை உருட்டி, ஆட்டத்தில் காய்களை நகர்த்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பல்வேறு கட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்களும், 2 மற்றும் 3-ம் பரிசாக முறையே ரூ.2 ஆயிரத்து 500, ரூ.1000 மதிப்புள்ள பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் தாயக்கட்டை அரசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, ‘இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் விளையாடுவதற்கு கூட நேரமும், சேர்ந்து விளையாட ஆட்களும் இல்லாத சூழலில் இது போன்ற போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மன அழுத்தமும் குறைகிறது’ என்றார்கள்.
#Vanakambharatham #Erode #news