தூத்துக்குடி செப், 2
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார். அறங்காவலர்கள் நியமனம் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு, அறங்காவலர்கள் குழுவினருக்கு நேரில் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் நடைபெறும் என சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி முழு முயற்சியோடு அறநிலையத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இந்த திருப்பணிகளை குறித்த காலத்தில் தொடங்கி விரைந்து முடிப்பதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளோம். மேலும் முதலமைச்சரின் இந்த முயற்சிக்கு மேலும் மெருகூட்டி குறித்த காலத்தில் இந்த பணியை நிறைவு செய்ய அறங்காவலர்கள் முழு மனதோடு முயற்சிப்பார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என கூறினார்.
மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் இந்த திருப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் மெகா திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக பணிகள், மெகா திட்டப்பணிகளுடன் இணைந்தே நடைபெறும் என அவர் கூறினார்.