கடலூர் ஆக, 28
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் 2022 என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது. மத்திய அரசின் அறிவியல் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேதி பொறியாளர் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு பொறியியல் புல முதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார்.
இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக வேதி பொறியியல் துறை தலைவர் தனசேகர் வரவேற்றார். பதிவாளர் சீத்தாராமன் வாழ்த்தி பேசினார். மும்பை மருத்துவ தொழில்நுட்ப நிறுவன முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்திய வேதி பொறியாளர் கழக தலைவர் புடாலா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக மாநாட்டு மலரை துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.மாநாட்டில் எத்தியோபியா, துருக்கி மற்றும் ஓமன் நாட்டில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பலர் இணையவழியில் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.