ஈரோடு ஏப்ரல், 11
ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் அவர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 லோக்சபா தொகுதிக்கும் ஒரே கட்டமாக வருகிற 19 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி, பாஜக தலைமையில் ஒரு அணி, நாம் தமிழர் தனியாக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் நான்கு தரப்புமே தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரிடம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நீண்ட கால பிரச்சினைகளை சொல்லி கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். தங்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.
அதேநேரம் தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து வருகிறார்கள். அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரைச் சுற்றியுள்ள மக்கள் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். அவர்களிடம் தேர்தல் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..
இதுஒருபுறம் எனில் தேனி மாவட்டத்தில் போடி அருகே சில மலை கிராம மக்கள் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அந்த வரிசையில் ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றும்.. அப்படி அகற்றாவிட்டால் வருகிற லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர்.
குடிகாரர்களின் தொல்லை காரணமாக தினமும் இன்னல்களை அனுபவித்த மக்கள் டாஸ்மாக் கடையை மூட வைக்க பல முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் தான், டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளனர். இந்த பேனர் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.