கோயம்புத்தூர் ஆக, 25
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை ஈச்சனாரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து வாகனம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் இருபுறங்களிலும் திரளான ஆண்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்றனர். அவர்களை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து அங்கிருந்து வாகனம் மூலம் புறப்பட்டு விழா அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வர் ரூ.663 கோடி செலவில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 410 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.