செங்கல்பட்டு ஆகஸ்ட், 22
மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரூ.1½ கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் பூஞ்சேரி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள், 35 ஜாதி சான்றிதழ்கள், 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன்கார்டுகள வழங்கப்பட்டுள்ளன. வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட நபர்களுக்கு கடன் உதவியும், புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதமர் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டி கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வசித்து வரும் 55 குடும்பத்தினருக்கு கழிவறை கட்டிடம் கட்டி கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் ஜூலை அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பூஞ்சேரி கிராமத்தில் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1½ கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அந்த பகுதி மக்களின் ஒத்துழைப்பை பெற செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் நேரடியாக சென்று விவரங்களை எடுத்து கூறி உதவிகளை வழங்குதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.