நவ, 11
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. வீட்டை சுத்தம் செய்வது, புத்தாடைகளை வாங்குவது, உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்குவது, சலுகை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்று பல முனைகளில் நீங்கள் பிசியாக இருப்பீர்கள். இந்த சமயத்தில் உங்கள் செல்லக் குழந்தைகளின் தேவைகளையும் நீங்கள் பார்த்து, பார்த்து செய்யக் கூடும். அவர்களுக்கான புத்தாடை, பட்டாசு, விளையாட்டுப் பொருட்கள் என என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் வாங்கியிருப்பீர்கள்.
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்ய இவை மட்டும் போதுமா? குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ள வேண்டாமா? குதூகலங்களுக்கு இடையே எச்சரிக்கை உணர்வை நாம் மறந்திருப்போம். ஆக, விபத்தில்லா மற்றும் நோயில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பச்சிளம் குழந்தைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். ஆபத்துகளை அறிந்திராத பச்சிளம் குழந்தைகள் மீதுதான் அதிக கவனம் தேவை. தவழ்ந்து செல்லக் கூடிய, தடுமாறி நடந்து செல்லக் கூடிய இளம் குழந்தைகள் எதையாவது பொறுக்கி வாயில் வைத்து விடுவார்கள். குறிப்பாக தீபாவளி சமயத்தில் பட்டாசு, மெழுகுவர்த்தி, தீக்குச்சி போன்றவற்றை வாயில் வைத்து கடித்தால் விபரீதம் ஆகிவிடும். அதை உணர்ந்து பாதுகாப்பு அரண் அமைக்கவும்.
இளம் வயது சிறுவர், சிறுமியர்கள் பட்டாசு வெடிக்கும் ஆர்வ மிகுதியில் கை, கால்களை காயப்படுத்தி கொள்ள வாய்ப்பு உண்டு. அதிக சத்தம் மற்றும் புகை வெளியேற்றும் வெடிகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் உங்கள் கண் பார்வையில் வெடி வெடிப்பதை உறுதி செய்யவும்.
தீப ஒளி வீடெங்கும் நிறைந்திருக்கும் வகையில் குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தகைய தருணங்களில் தீ நமது புத்தாடைகள் மீது பட்டுவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விளக்குகளுக்கு அருகாமையில் செல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தீ பற்றக் கூடிய பொருட்களை அருகாமையில் வைக்கக் கூடாது.
தீபாவளி சமயத்தில் குழந்தைகள் அதிக நேரம் வெளியிடங்களில் சுற்றக் கூடாது. ஒலி மாசு மற்றும் காற்று மாசு நிறைந்த பட்டாசுகளை திரும்பிய திசையெங்கும் வெடித்துக் கொண்டிருப்பார்கள். அது குழந்தைகளின் செவித்திறன் மற்றும் சுவாசத் திறனை பாதிக்கக் கூடும். குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
தீபாவளி சமயத்தில் குழந்தைகளின் உடைகள் ஒழுங்கில்லாமல் இருந்தால், அருகாமையில் உள்ள பட்டாசு நெருப்பு அதில் தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, வீதியில் வெடிக்காமல் புகைத்து கொண்டிருக்கும் பட்டாசுகளை மிதிக்கும் வாய்ப்பு உள்ளதால் காலணிகளை அணிந்து வெளியே செல்ல அனுமதிக்கவும்.
ஸ்நாக்ஸ் கட்டுப்பாடு அவசியம் : தீபாவளி சமயத்தில் வீட்டில் நிறைய இனிப்புகள் மற்றும் ஸ்நாக்ஸ் இருக்கும். அவற்றை ஒரே சமயத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் குறைவான ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு சாப்பிடுவதை உறுதி செய்யவும்.